ஒ.வெ.செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை: பள்ளி வரலாறு
தொடக்கத்தில் மானாமதுரை மேல்கரையில் தற்போது குறட்டி கருப்பசாமி கோவில் உள்ள சந்தை ஒட்டி குப்பண்ண அய்யங்கார் ஹையர் எலிமெண்டரி ஸ்கூல் ஒன்று நடந்து வந்த காலம். அதே சமயம் சீனிவாச அய்யங்கார் மிடில் ஸ்கூல் (ஹிந்து செகண்டரி ஸ்கூல்) என்ற ஒன்று தற்போது ஒ.வெ.செ. தொடக்கப்பள்ளி உள்ள இடத்தில் நடந்து வந்தது. இப்பள்ளியை திரு.சி.கரு.சி.கரு.வெள்ளையன் செட்டியார் அவர்களின் மூத்த புதல்வர் ராவ்சாகேப் திரு.சிந்தாமணி செட்டியார் அவர்கள் 1921-இல் விலைக்கு வாங்கி அதற்கு ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் ஹைஸ்கூல் என்று பெயரிட்டு நடத்தினார்.
அந்த ஆண்டு நான்காம் படிவம் தொடங்கப்பட்டது. 1924 மார்ச் மாதம் நடந்த SSLC தேர்விற்கு முதன்முறையாக மாணவர்கள் அனுப்பப் பட்டனர்.
1921-இல் கீழ்கரையில் வித்யாபிவிருத்தி சங்கம் என்ற பெயரால் நடந்துவந்த ஆரம்பப் பள்ளியையும் வாங்கி இவர்களே நடத்தி வந்தார்கள். 2 வருடம் கழித்து குப்பண்ண அய்யங்கார் பள்ளி நடத்தப்படாமல் மூடப்பட்டது. அதன் காரணமாக மேல்கரையில் தொடக்கப் பள்ளி இல்லாத குறையைப் போக்க தெற்கு ரதவீதி மேல்கோடியில் 'ஒ.வெ.செ. தொடக்கப்பள்ளி மேற்கு' என்ற பெயரில் மற்றொரு தொடக்கப் பள்ளியைத் துவக்கினார்கள். பிற்பாடு குப்பண்ண அய்யங்கார் பள்ளிக் கட்டிடம் பயன்படுத்தப் படாமல் இருந்ததால் தொடக்கப் பள்ளி அவ்விடத்திற்கு மாறியது.
1928 வாக்கில் தற்போதைய மேல்நிலைப்பள்ளி இடம் வாங்கப்பட்டு சுமார் ரூ.87,000/- செலவில் கட்டிடம் கட்டப்பட்டது. இப்பகுதியிலேயே அழகிலும், அமைப்பிலும் சிறந்ததான இக்கட்டிடமும் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள விளையாட்டு மைதானமும் கொண்டதாகப் பள்ளி வளாகம் அமைந்துள்ளது.
1935-இல் கட்டிடம் முடிக்கப்பட்டு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அந்தக் காலத்தில் பழைய இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில் இப்பள்ளியைச் சேர்த்து மொத்தம் 12 உயர்நிலைப் பள்ளிகள்தான் இருந்தன என்பது நினைவில் கொள்ளத் தக்கது.
1978-இல் இது மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது. சுமார் 250 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட பள்ளி தற்போது சுமார் 1700 மாணவர்களையும்* 51 ஆசிரியர்களையும்* கொண்டதாக வளர்ந்துள்ளது.
(* பள்ளி நாட்குறிப்பு 2000-2001 -இல் முதல் பக்கம் இடம்பெற்ற கட்டுரை மேலே தரப்பட்டுள்ளது)


No comments:
Post a Comment