Wednesday, April 20, 2022

கல்வி: சமூக மேம்பாட்டுக் கருவி

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளிக்கும், மானாமதுரை ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளிக்கும்  நிறைய ஒற்றுமைகள் உண்டு.

இரண்டு பள்ளிகளும் அடித்தட்டு விளிம்புநிலை மனிதர்களை கல்வியின் மூலம் உயர்ந்த நிலையை அடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

எந்தவித பின்புலமும் இல்லாமல் இந்தப் பள்ளியில் படித்து கல்வியின் மூலம் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் பல பேர் உண்டு.

இரண்டு பள்ளிகளிலும் கல்வியும் ஒழுக்கமும் இரு கண்களாகப் போற்றப்பட்டுக் கற்பிக்கப்பட்டது.

இரண்டு பள்ளிகளின் நிறுவனர்களும் தங்களது இல்லத்தை எளிமையாக கட்டிக்கொண்டு கல்வி நிலையத்தை பிரம்மாண்டமாக கட்டித் தந்த கொடை வள்ளல்கள்.

ஏழ்மை, வறுமை, அறியாமை என்னும் கொடிய நோய்களுக்கு கல்வியை அருமருந்தாக்கி,  ஒவ்வொரு மாணவனின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்திய பள்ளிகள்.

சகல நம்பிக்கைகளையும் இழந்த ஒரு மனிதன், கடைசியாக தப்பிப் பிழைப்பதற்கு ஒற்றைக் கயிறைப் பிடித்து தட்டுத்தடுமாறி மேலே ஏறி வருவது போல்...கல்வி என்னும் ஒற்றைக் கருவியைக் கொண்டு தனது பரம்பரையையே வாழ்வில் உயர்த்திய பல மாணவர்கள் இப்பள்ளிகளுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.  

இரண்டு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களும், தமது மாணவர்களைத் தனது குழந்தையாகப் போற்றி, பண்படுத்தி, மேம்படுத்திய ஞானிகள்.

திருமணத்தை பெற்றோர்கள் செய்து வைப்பார்கள்.

ஆனால் 60-வது திருமணத்தை பெற்றோருக்கு குழந்தைகள் செய்து மகிழ்வார்கள்.

அதுபோல பள்ளியின் 100-வது ஆண்டு விழாவை பள்ளி முன்னாள் மாணவர்களும் சங்கமம் அறக்கட்டளையும் முன்னெடுத்து கொண்டாடுவது மிகச் சிறப்பாகும்.

உங்களது முயற்சிகளில் வெற்றி பெற்று, இந்தப்  பள்ளி இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கல்விப் பணி செய்து...லட்சம் லட்சம் மாணவர்களைக் கரைசேர்க்க வாழ்த்துகிறேன்.

வேர்களுக்கு விழுதுகள் எடுக்கும் இந்த விழாவை, சிறப்பாக கொண்டாட பெருமுயற்சி எடுத்துக் கொண்ட சங்கமம் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.



நா. சுந்தரராஜன்,

தலைமை ஆசிரியர்,

மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.

(9360921702).


No comments:

Post a Comment